சற்று முன்புதான் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியுடன் பேசினேன். என் பாராட்டுதல்களைத் தெரிவித்தேன். கூடவே விஜய் பாபுவும் பிரஷாந்த் பிள்ளையும் இருந்தார்கள். பிரஷாந்த் பிள்ளையிடம் சொன்னேன், எனக்கு எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பிறகு எந்த இசையமைப்பாளர்களையும் அவ்வளவாகப் பிடிக்காது. ராஜாவின் பின்னணி இசை அற்புதம். பாடல்கள் பிடிக்காது. ஏ.ஆர். ரஹ்மானை சுத்தமாகப் பிடிக்காது. மற்றபடி என்னை அசர வைத்த இசையமைப்பாளர் என்று சொன்னால் அது தேவ்.டி அமித் த்ரிவேதி மட்டும்தான். அந்த அமித் த்ரிவேதிக்குப் பிறகு நான் மிரண்டு போன இசை உங்களுடையது பிரஷாந்த்.

லிஜோவிடம், “கம்மாட்டிப் பாடம், ஒழிவு திவசத்த களி ஆகிய இரண்டு படங்களுக்குப் பிறகு உங்கள் படம்தான். உலகத் தரமான படம். கொஞ்சம் கூட சலிப்புத் தராத படமாகவும் இருந்தது. கம்மாட்டிப் பாடத்தில் இருந்த கமர்ஷியல் தன்மை கூட உங்கள் படத்தில் இல்லை. உலகின் மிக முக்கியமான படங்களில் ஒன்றை இயக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்” என்றேன். நெகிழ்வுடன் நன்றி சொன்னார். இப்படிப்பட்ட ஒரு படத்தைத் தயாரித்த விஜய் பாபுவிடம் ஃபோனைக் கொடுத்தார். அவரிடமும் பேசிப் பாராட்டினேன்.

லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியின் அங்கமாலி டயரிஸ் பார்க்கவில்லையானால் நீங்கள் ஒரு அற்புதத்தைப் பார்க்கத் தவறிவிட்டீர்கள் என்று பொருள். இந்தப் படத்தை எனக்கு அறிமுகம் செய்த பிரபு காளிதாஸுக்கு என்ன கைம்மாறு செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

Advertisements