அசோகமித்திரன் நேற்று இரவு மறைந்தார்.

***

பழுப்பு நிறப் பக்கங்கள் – 17.5.2015

அசோகமித்திரனைப் பற்றி உணர்வெழுச்சிகளின் ஆளுகைக்கு உட்படாமல் எழுதுவது எனக்குச் சற்று கடினம். ஏனென்றால் அவரை நான் எனது ஆசான் என்று மட்டும் நினைக்கவில்லை. என்னைப் பெற்று வளர்த்த தகப்பனாரையும் விட உயரமான இடத்தில் வைத்திருக்கிறேன். என்னுடைய எழுத்தின் ஆதாரமான உயிர்த் தாதுவை அசோகமித்திரனிடமிருந்தே நான் எடுத்துக் கொண்டேன். அவர் அதை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லா தகப்பன் மகன் உறவைப் போலவே தான் எங்களுடையதும். அவருடைய எழுத்தை என் எழுத்தின் வித்து என நான் கொண்டாலும் என் எழுத்தின் மீது அவருக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்ததால் நேர்வாழ்வில் நான் அவரிடமிருந்து விலகியே நிற்கிறேன்.

1968-69ம் ஆண்டுகளில் தீபம் பத்திரிகையில் அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ என்ற நாவல் தொடராக வந்து கொண்டிருந்தபோது அந்த எழுத்து என் எழுத்தின் அடிப்படைக் குணாம்சங்களையே தீர்மானிப்பதாக எனக்குள் போய்ச் சேர்ந்தது. அப்போது அதை உணர்ந்து கொள்ளக் கூடிய வயது எனக்கு இல்லை. அடுத்து, அந்த நாவல் புத்தகமாக வந்தபோது 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்தேன். அவருடைய எழுத்தை ஒன்று விடாமல் படித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ என்ற அவரது மகத்தானதொரு சிறுகதைத் தொகுப்பை எப்போதும் கையிலேயே வைத்திருப்பேன். அப்போது நான் தில்லியில் இருந்தேன்.

அசோகமித்திரன் கணையாழி மாத இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். அதன் ஆசிரியர் கி. கஸ்தூரிரங்கன் தில்லியில் இருந்தார். கணையாழியில் நான் எழுதும் வாசகர் கடிதம் நிவேதிதா, புதுதில்லி என்று வெளிவரும். அதுதான் என் முதல் இலக்கியப் பிரவேசம். பிறகு கணையாழியில் என்னுடைய முதல் சிறுகதை (முள்) வெளிவந்தது. அதைப் பாராட்டி அசோகமித்திரன் எனக்கு ஒரு போஸ்ட்கார்ட் எழுதியிருந்தார். அதற்கு நான் பதில் எழுதினேன். தில்லியிலிருந்து சென்னை வரும் போதெல்லாம் தி. நகர் பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள ஒரு அமைதியான தெருவில் இருந்த ஒரு தனியான வீட்டில் அவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். எண்பதுகள். அப்போது அவர் ஒரு பூனை வளர்த்து வந்தார். அசோகமித்திரன் பிறந்த ஆண்டு 1931 என்பதால் நான் அவரைச் சந்தித்துக் கொண்டிருந்த போது அவர் வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். எழுத்தைத் தவிர வேறு வேலை எதுவும் கிடையாது. ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதினால் சொற்பமாக ஏதோ கிடைக்கும். பிறகு – தொண்ணூறுகளில் என்று நினைக்கிறேன் – அவரை தி.நகர் வீட்டில் சந்தித்த போது அந்த வீடு அபார்ட்மெண்ட்டாக மாறி இருந்தது. பழைய வீட்டின் அழகும் அமைதியும் காணாமல் போயிருந்தது. அதன் பிறகு அவரைத் தேடிச் சென்று சந்தித்ததில்லை.

என் ஆசானும் என் எழுத்தின் பிதாமகரும் என்பதால் 1999-இல் வெளிவந்த நேநோ என்ற என்னுடைய சிறுகதைத் தொகுப்புக்கு அசோகமித்திரனிடம் முன்னுரை கேட்டிருந்தேன். அதில் கணையாழியில் வெளிவந்த கதைகளும் இருந்தன; ஆனால் metafiction என்று சொல்லத்தக்க பல கதைகளும் இருந்ததால் அவையெல்லாம் தனக்குப் பிடித்தமில்லை என்ற ரீதியில் முன்னுரை அளித்திருந்தார். அதற்குப் பிறகு தூரத்திலிருந்தே அவருடைய எழுத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் அவர் எழுத்தின் மீது என்னுடைய பதினைந்தாவது வயதில் என்ன ஒரு பக்தியும் பிரேமையும் இருந்ததோ அதில் எள்ளளவும் இப்போதும் குறையவில்லை. சொல்லப் போனால் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

எண்பதுகளின் முடிவில் ஓரளவுக்கு சர்வதேச இலக்கியத்தைப் பயின்று விட்டு மீண்டும் அசோகமித்திரனை வாசித்த போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கு இன்றளவும் எனக்கு விடை கிடைத்தபாடில்லை. கடவுளிடம் மக்கள் ஏதேதோ கேட்பார்கள். ஆனால் நான் கடவுளிடம் அந்தத் தீராத சந்தேகத்தைத்தான் கேட்பேன். சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டும். சமீபத்தில் ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் ஓரான் பாமுக் எழுதிய இஸ்தான்புல் என்ற பெரிய புத்தகத்தைப் படித்தேன். அதில் பாமுக் முக்கியமான ஒரு துருக்கி எழுத்தாளரைப் பற்றி விரிவாக எழுதுகிறார். அவர் பெயர் அகமத் ஹம்தி தம்பினார் (Tanpinar). பாமுக்கின் மூத்த தலைமுறை எழுத்தாளர். ஆச்சரியம் என்னவென்றால் தம்பினாரின் முக்கியமான நாவலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தவிர, பாமுக்கின் எல்லா நாவல்களுமே தமிழில் கிடைக்கின்றன. ஆக, பாமுக்கும் தமிழில் கிடைக்கிறார். அவருக்கு மூத்த எழுத்தாளரும் தமிழில் கிடைக்கிறார். அதேபோல் அநேகமாக எல்லா முக்கியமான ஐரோப்பிய எழுத்தாளர்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல. விரிவாக விவாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். உதாரணமாக, மிலன் குந்தேரா (செக்கோஸ்லாவேகியா), இதாலோ கால்வினோ (இத்தாலி) மற்றும் எல்லா ஃப்ரெஞ்ச், ஜெர்மன் எழுத்தாளர்களும் இங்கே மொழிபெயர்க்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் அவர்கள் எல்லோரையும் விட – ஆம், உலகப் புகழ் பெற்ற காஃப்கா, ஆல்பர் கம்யு ஆகியோரையும் விட சிறப்பான எழுத்தாளர் அசோகமித்திரன். அப்படிப்பட்ட அசோகமித்திரன் செக்கோஸ்லாவேகியாவிலும், ஜெர்மனியிலும், ஃப்ரான்ஸிலும், இத்தாலியிலும் ஏன் பிரபலமாக இல்லை? இவ்வளவுக்கும் தமிழர்களை விட வாசிப்புப் பழக்கம் மிக அதிகம் உள்ளவர்கள் ஐரோப்பியர்கள். தமிழ்நாட்டில் அசோகமித்திரன் பிரபலமாக இல்லாததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ அவர் ஏன் பிரபலமாக இல்லை? இவ்வளவுக்கும் அவருடைய நாவல்கள் நல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. கரைந்த நிழல்கள் நாவலை ஒரு அமெரிக்கரே மொழிபெயர்த்திருக்கிறார். இதுதான் நான் கடவுளிடம் கேட்க விரும்பும் கேள்வி.

எண்பதுகளில் அசோகமித்திரனை வாசித்த போது உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்களை விடவும் – இந்தியத் துணைக்கண்டத்தில் பிரபலமான சாதத் ஹாஸன் மாண்ட்டோவை விடவும் – அசோகமித்திரன் எனக்கு முக்கியமானவராகத் தெரிந்தார். இப்போது முப்பது ஆண்டுகள் கழித்துப் படிக்கும் போதும் அதே கருத்து தான் தீவிரமடைகிறது. ஆக, உலகமெல்லாம் படித்துக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு எழுத்தாளர் எப்படி இங்கே சென்னை வீதிகளில் பழைய சைக்கிளில் போய்க் கொண்டிருக்கிறார்? அசோகமித்திரன் என்றாலே அந்தக் காலத்தில் அவர் உருவம் சைக்கிளோடு சேர்ந்து தான் ஞாபகம் வரும். இப்போதுதான் முதுமையின் காரணமாக சைக்கிளை விட்டு விட்டார் என்று நினைக்கிறேன். ஜெயமோகனுடனான ஒரு பேட்டியில் சாப்பிட வேண்டிய வயதில் சாப்பாடு கிடைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார் அசோகமித்திரன். (பார்க்கவம்: http://www.jeyamohan.in/712#.WNQpkmSGPIV)

அசோகமித்திரன் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதியிருக்கும் நூல்களின் தலைப்புகளை எழுதினாலே இந்தக் கட்டுரை முடிந்து விடும். அந்த அளவுக்கு எழுதிக் குவித்திருக்கிறார். ஆனால் எல்லாமே அக்னித் துண்டங்கள். ஒன்று கூட விதிவிலக்கு அல்ல. ஒற்றன், பதினெட்டாவது அட்சக் கோடு, தண்ணீர், இன்ஸ்பெக்டர் செண்பகராமன் எல்லாமே கிளாஸிக். கரைந்த நிழல்கள் மிகச் சிறிய நாவல்தான். ஆனால் இப்போது இந்தத் தொடருக்காக அதைப் படித்து முடிக்க எனக்குப் பத்து நாட்கள் தேவைப்பட்டன. அந்தப் பாத்திரங்களின் துயரமும் அவர்களுடைய வாழ்வின் அபத்தமும் என்னை மூச்சு முட்டச் செய்தது. அந்த அற்புதமான அனுபவத்தை நீங்கள் படித்தே தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதை வாசித்துக் கொண்டிருக்கும் போதே நான் தாந்தேயின் டிவைன் காமெடியின் முதல் பாகமாக வரும் நரகத்தையும் படித்தேன். அப்பேர்ப்பட்டதொரு கிளாஸிக் கரைந்த நிழல்கள். ஆல்பெர் கம்யுவின் அபத்தத்தைப் பற்றி உலகமெல்லாம் பேசுகிறார்கள். இந்தக் கரைந்த நிழல்களில் அசோகமித்திரன் வரைந்திருக்கும் அபத்தத்தையும் துயரத்தையும் உலகில் வேறு எந்த மொழி இலக்கியத்திலும் நான் வாசித்ததில்லை.

அசோகமித்திரன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஜெமினி ஸ்டுடியோவில் வேலை செய்திருக்கிறார். அந்த அனுபவங்களே கரைந்த நிழல்கள் நாவலுக்கான கச்சாப் பொருள். என்றாலும் இது சினிமா உலகத்தைப் பற்றிய நாவல் அல்ல; மனிதர்களைப் பற்றியது. நடராஜன், ராஜ்கோபால் என்ற புரொடக்‌ஷன் மேனேஜர்கள், நடராஜனின் உதவியாளன் சம்பத், ரெட்டியார் என்ற தயாரிப்பாளர், ராம ஐயங்கார் என்ற ஸ்டுடியோ அதிபர், அவர் மகன் பாச்சா, நடிகை ஜயசந்திரிகா, சினிமாவில் ஏதாவது ஒரு சான்ஸ் தேடும் வேலு, ஷண்முகம் என்ற பையன்கள் என்று மிகச் சில பாத்திரங்கள்தான். ஆனால் அவர்களிடம் கிரேக்கத் துன்பவியல் காவியங்களில் காணும் துயரத்தைக் காண்கிறோம்.

***

காரின் ஹார்ன் சத்தம் கேட்டுத் தூக்கத்திலிருந்து விழிக்கிறான் நடராஜன். ஏராளமான கொசுக்கள் அவன் முகத்தையும் கழுத்தையும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. சிறிய அறை. கோழிமுட்டை விளக்கின் வெளிச்சத்தில் தரையில் வெவ்வேறு கோணங்களில் படுத்திருக்கும் ஐந்து உருவங்களின் மீது மிதிக்காமல் உதைக்காமல் செல்வது சாத்தியமே இல்லை. மெதுவாக அடிமேல் அடி வைத்து எழுந்து போகிறான். அம்மா சாக்கு விரிப்பில் படுத்திருக்கிறாள். மனைவியும் கைக்குழந்தையும் ஒரு பழம்புடவையைப் போட்டுப் படுத்திருக்கிறார்கள். அந்த அறையை ஒட்டி ஒரு சிறிய சமையல் அறை. அதில்தான் எல்லோரும் குளிக்க வேண்டும். சமைக்க வேண்டும். சாப்பிட வேண்டும். இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் நிலை. வெளிப்புறப் படப்பிடிப்புக்காக நள்ளிரவு மூன்று மணிக்கு இப்படிக் கிளம்புகிறான் நடராஜன். அடுத்த அத்தியாயத்தில் வெளிப்புறப் படப்பிடிப்பும், நடிகை ஜயசந்திரிகா நடனமாடும் அரை மணி நேர இண்டோர் ஷூட்டிங்கும் வருகிறது. நடிகைக்கு உடம்பு சரியில்லை. யார் அழைத்தும் வரவில்லை. ரெட்டியாரே கிளம்பிப் போகிறார். அப்போது அவர் சொல்லும் வார்த்தைகள் முப்பது ஆண்டுகளாக என் ஞாபகத்தில் தங்கியிருந்தன.

‘எல்லா பொம்பளைகிட்டே இருக்கிறதுதான் உங்கிட்டேயும் இருக்கு. ஆனா எல்லா பொம்பளை மூஞ்சியும் பெரிசா நாற்பதடி படுதாவிலே தெரிஞ்சு நாலு கோடி மடையன்களை மோகம் பிடிச்சு அலைய வைக்க முடியாது. இதோ இந்தக் கிழவனும் குஷ்டரோகிக்காரனும் உன்னைச் சுத்தறதெல்லாம் இந்தக் காரணத்தினாலேதான். நீ இப்பவே ராத்திரி பகல் தெரியாம புரள ஆரம்பிச்சுட்டா உன் மூஞ்சியைப் படுதாவிலே காண்பிக்க வரவங்க எல்லாரும் போயிடுவாங்க. இதோ வெளியிலே காத்திண்டிருக்கே கார், அந்த ஆள்களும் போயிடுவாங்க. அதுக்கப்புறம் நீதான் அவங்களைத் தேடிண்டு தேடிண்டு போகணும். உன் தலை எழுத்து எப்படி இருக்கோ. நான் கடைசியா கேட்கிறேன். இன்னிக்கு என் வேலையை ஒழுங்கா முடிச்சுக் கொடுத்திட்டு வரப் போறியா, இல்லையா? ’

மேலும் சொல்கிறார். ‘இதற்கெல்லாம் பெரிசா வருத்தப்பட்டுக் கொள்ளாதே பாப்பா. இன்னும் ஒண்ணு கூட இப்போ நான் சொல்லிடலாம். உங்க அம்மாவை அவள் வைத்தீஸ்வரன் கோவிலிலேந்து இங்கே வந்த முப்பது வருஷங்களாகத் தெரியும். ஒருவேளை உனக்குத் தகப்பனே நான்தானோ என்னவோ?’

இந்த ரெட்டியாரும் நடராஜனும் ஜயசந்திரிகாவும் இந்த அத்தியாயத்தோடு நாவலில் காணாமல் போய் விடுகிறார்கள். பிறகு நாவலின் கடைசியில் சம்பத் பேச்சோடு பேச்சாகச் சொல்கிறான். ரெட்டியார் கடனில் மூழ்கி எங்கோ அட்ரஸ் இல்லாமல் ஓடி விடுகிறார். நடராஜன்? சம்பத்தின் உரையாடலில் நடராஜனின் பெயர் கூட வருவதில்லை. நாம்தான் அடையாளத்தை வைத்துக் கண்டு கொள்ள வேண்டியிருக்கிறது.

‘ஒரு பர்ஸ்ட் கிளாஸ் புரொடக்‌ஷன் மேனேஜர் இருந்தாரு ரெட்டியார் கிட்டே. அவரு இப்போ கிடைச்சா இந்த நிமிஷம் ஆபீஸ் வைச்சுடலாம்.’

‘யாருன்னு சொன்னா நானும் விசாரிச்சுப் பார்ப்பேன்.’

‘இப்போ இருக்காரோ போயிட்டாரோ. அதுவே சந்தேகங்க. ஒரு வருஷம் முன்னாலே சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டண்டேதான் பார்த்தேன். சொல்லப் போனா பிச்சை எடுத்திண்டிருந்தாரு. நடக்கவும் முடியலை. கண்ணும் தெரியலை போல இருந்தது. அவர் அனுப்பிச்சு நான் எவ்வளவு காப்பி சாப்பாடு வாங்கி வந்திருக்கேன்?’

ராஜ்கோபாலின் கதை மணலில் விழுந்த சோப்புக் கட்டியோடு துவங்குகிறது. ஒரு சேரியில் வசிக்கும் அவன் வீட்டின் ஓரத்திலேயே ஒரு மறைப்பு கட்டிக் குளிக்கிறான். சோப்புக் கட்டி கீழே விழுந்து விடுகிறது. பிறகு சோப்பைப் பிடித்து உடலில் தேய்த்துக் கொள்ளும் போது மணல் துகள்கள் பிராண்டுகின்றன. முப்பத்து நான்கு வயது. திருமணம் ஆகவில்லை. வேலைக்கு சைக்கிளில் கிளம்புகிறான். சைக்கிளில் செயின் மூடி இல்லை. தேவைப்படாது என்று எண்ணி டிரௌசர் கிளிப்புகளை எடுத்துக் கொள்ளாததால் டிரௌசர் நுனி சைக்கிள் செயினில் சிக்கி மசியாக ஆகாமல் பார்த்துக் கொள்வது சிரமமாக இருக்கிறது. இயக்குனர் ஜகன்னாத ராவைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போகிறான். காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. இயக்குனர் சாப்பிடுகிறாயா என்று கேட்கிறார். நாகரீகமாக மறுத்து விடுகிறான். இயக்குனரின் மனைவி தரும் பழரசத்தைக் குடிக்கிறான். இந்த இடத்தில் அசோகமித்திரனின் எழுத்தைப் பாருங்கள்: ‘தம்ளர் ஓரத்தில் எண்ணெய்ப் பசை சரியாகக் கழுவப்படாமலிருந்தது.’

பதினோரு மணி. சில்லறையில் அரை பாக்கெட் சார்மினார் வாங்கிக் கொண்டு சைக்கிளை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் மிதித்துக் கொண்டு போகிறான். அரக்கன் போல் நிமிர்ந்து கிடக்கும் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஏறி இறங்கும் போது சக்கரத்தின் ட்யூப் காற்று எல்லாவற்றையும் இழந்து விட்டிருக்கிறது. நல்ல இறக்கத்தில் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு நிற்கச் சிரமமாக இருக்கிறது. பிறகு ஒருவழியாக சைக்கிளைத் தள்ளிக் கொண்டே போய் ஒரு மெக்கானிக் கடையைத் தேடிக் கண்டு பிடித்துக் கொடுக்கிறான். பஞ்சர் போட்டு உடனே வாங்க முடியாது. கையில் ஒரு பைசா இல்லை. கொலைப் பசி வேறு. பஞ்சர் போட்டு வைக்கச் சொல்லி விட்டு நடந்தே கிளம்புகிறான். பனிரண்டு மணிக்குள் சாஹினி ஸ்டுடியோ போனால் சாப்பாட்டு நேரத்தில் யாரையாவது பிடிக்கலாம். பாடல் காட்சியில் க்ரூப் டான்ஸ் ஆடும் பெண்களை அழைத்துச் செல்லும் வேன் ஒன்றில் இடம் கிடைக்கிறது.

‘எல்லாரும் கலைந்த தலை, எண்ணெயும் தூக்கமும் வழியும் முகம், வழிக்கப்பட்டு பூசப்பட்டு அழிந்து போய் மீண்டும் பூசப்படாத புருவமாக இருந்தார்கள். அவர்கள்தான் ஸ்டுடியோ போய் மேக்கப் முடிந்தவுடன் புத்துயிர் பெற்று சோர்வு களைப்பு இல்லாமல் மணிக்கணக்கில் உடலை ஊடுருவி விடும் போலப் பிரகாசமான விளக்குகளின் ஒளியில் ஒரு நடனத்தின் நூற்றில் ஒரு பங்கைத் திரும்பத் திரும்ப ஆடிக் கொண்டே இருப்பார்கள். பிற்பகல் இரண்டு மணிக்கு மேக்கப் முடிந்து மூன்று மணிக்கு உடலெல்லாம் உறுத்தும் ஜரிகை ஜிகினா நடன உடை அணிந்து கொண்டு நான்கு மணிக்கு ஸ்டுடியோவுக்குப் போனால் அன்றைய வேலையை முடித்து அவர்களை வீட்டுக்குப் போகச் சொல்லும் போது விடியற்காலை மூன்று மணி நான்கு மணி கூட ஆகலாம். அப்போது அவர்கள் அவிழ்த்துப் போடும் அந்த ஜிகினா உடைகளை ஒரு மூட்டையாக ஒருவன் கட்டுவான். அதை நினைத்தவுடன் தாங்க முடியாத ஒரு நாற்றத்தின் நினைவு ராஜ்கோபாலுக்குக் குமட்டலை உண்டு பண்ணியது.’

***

பேண்டெல்லாம் என்ன கரி என்று கேட்பவர்களிடம் சைக்கிள் செயின் மசி துணியில் பட்டு விட்டது என்கிறான் ராஜ்கோபால். சாஹினி ஸ்டுடியோவில் சாப்பாட்டுக்காக அங்கும் இங்கும் அலைகிறான். அந்த அத்தியாயத்தில்தான் ரெட்டியார் படம் எடுக்க முடியாமல் ஊரை விட்டே ஓடி விட்டார் என்ற செய்தி போகிற போக்கில் சொல்லப்படுகிறது. அங்கிருக்கும் சிட்டி என்ற நண்பனிடம் தான் நாள் பூராவும் பட்டினி என்கிறான். இயக்குநர் ராம்சிங்கின் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ராம்சிங்கின் அடுத்தடுத்த இரண்டு படங்கள் நூறு நாட்கள் ஓடியிருந்தன. சிட்டி என்பவனிடம் தன்னை ராம்சிங்கிடம் அறிமுகப்படுத்தச் சொல்கிறான் ராஜ்கோபால். அந்த நேரம் பார்த்து அங்கே வரும் ஜயசந்திரிகா ராஜ்கோபாலின் மூக்கைப் பிடித்துக் கிள்ளி விளையாடி விட்டுப் போகிறாள். எல்லோரும் இதைக் கவனிக்கிறார்கள். குறிப்பாக இயக்குநர் ராம்சிங். பலரும் சூழ்ந்திருக்கும் இடத்தில் யாரும் அதிகம் லட்சியம் செய்ய வேண்டியிராத ஒருவனிடம் அசாதாரணக் கவனம் காட்டுவது ஜயசந்திரிகாவின் இயல்பு என்று அவர்களுக்குத் தெரியாதே என்கிறார் அசோகமித்திரன். அதற்கு மேலும் ராஜ்கோபாலுக்கு வாய்ப்பு கொடுப்பாரா இயக்குநர்? அதுவும் கை விட்டுப் போகிறது. பட்டினி. யாரோ எல்லோருக்கும் லட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தள்ளுமுள்ளுவில் ராஜ்கோபாலுக்கு லட்டு கிடைக்கவில்லை. பசி வயிற்றைக் கிள்ளுகிறது. சிட்டி ராஜ்கோபாலை அழைத்துக் கொண்டு ஒரு ஸ்டுடியோ காரில் சாப்பிடக் கிளம்புகிறான். கௌடியாமட் அருகில் வீடு மாதிரி ஒரு உணவு விடுதி இருக்குமே? ஆமாம்; பழனியாண்டி ஹோட்டல் என்கிறான் டிரைவர். ‘வண்டியை அங்கே விடுப்பா. ’ ‘உட்லண்ட்ஸே போயிடலாமே? ’ இது ராஜ்கோபால். இடையில் ராஜ்கோபால் சைக்கிளை விட்ட இடம் வருகிறது. காரை அவசரமாக நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொள்கிறான். சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓட்டலுக்கு வந்து விடுவதாகச் சொல்கிறான்.

ஆனால் அது அவன் நினைத்த கடை இல்லை. பிறகு அவன் சைக்கிள் விட்ட கடையைத் தேடிக் கண்டு பிடித்துக் காசு கொடுத்து விட்டு சைக்கிளை எடுக்கிறான். வெகுநேரமாக வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டதால் சைக்கிள் சூடேறி இருக்கிறது. இரு சக்கர டியூப்களும் வயதானவை.

பசி மயக்கத்துடன் மேம்பாலத்தில் ஏறி நுங்கம்பாக்கத்தைக் கடந்து மவுண்ட் ரோட்டை அடையும் போது கிட்டத்தட்ட சுயநினைவே இல்லை. பழனியாண்டி ஹோட்டல் என்ற நிழல்தான் தெளிவற்றதாகத் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறது. லாயிட்ஸ் ரோட்டை நெருங்கும் போது அவனுக்குப் பழக்கப்பட்ட ஒலி வருகிறது. ராஜ்கோபால் கீழே இறங்குமுன் சக்கரத்தை அழுத்திப் பார்க்கிறான். அது தட்டையாக இருக்கிறது. சைக்கிளைத் தள்ளிக் கொண்டே பழனியாண்டி ஹோட்டலை வந்து சேர்கிறான். அங்கே சிட்டி இல்லை. வீட்டுக்குப் போனால் ஆறிக் குளிர்ந்து போயிருக்கும் பழைய சாதம் கிடைக்கும். அப்பளம் இருந்தாலும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். பல்லால் கிழித்துத்தான் தின்ன வேண்டும். பழனியாண்டியில் ராஜ்கோபாலால் அசைவம் சாப்பிட முடியாது என்று உடுப்பி ஹோட்டல் போகிறார்கள். இடையில் அங்கே வந்து சேரும் நண்பன் மாணிக்கராஜ் ராஜ்கோபாலின் சைக்கிளை வாங்கிக் கொண்டு ‘பொட்டலம்’ வாங்கப் போகிறான். காற்று இல்லாத டயர். ‘பஞ்சர் ஒட்டிக் கொள்கிறேன். ’ பொட்டலம் வாங்கும் ஜோர். பொட்டலத்தைப் புகைத்ததும் ராஜ்கோபாலின் துயரம் அத்தனையும் பீறிட்டு அடிக்கிறது.

அசோகமித்திரனிடம் நான் வியக்கும் விஷயம் என்னவென்றால், கஞ்சாவிலேயே மூழ்கிக் கிடப்பவன் எப்படிப் பேசுவானோ, எப்படி நடந்து கொள்வானோ அப்படி எழுதியிருக்கிறார். ராஜ்கோபாலின் தயக்கம், தடை எல்லாம் காணாமல் போய் விடுகிறது. ‘போடா பேமானி! என்னை எத்தனை வருஷமாத் தெரியும்? ஒரு பிச்சைக்காசு கடன் தர நாலு நாழி யோசிக்கிறே! என்னைச் சாப்பிட வரச் சொல்லிட்டு நீ தின்னுட்டு வந்து நிக்கிறே! எனக்கு சிபாரிசாடா பண்ணறே சிபாரிசு, புளுகுணிப் பயலே! என்னை வைச்சுண்டே நீ சிபாரிசு பண்ணினா எந்த முட்டாள்டா காது கொடுத்துக் கேப்பான்! ’

மற்ற இருவருக்கும் போதை தெளிந்து விடுகிறது. ‘இப்போ உன் வீட்டுக்கு டாக்ஸியிலே போயிடலாம். சாயங்காலமா நான் உன் சைக்கிளைக் கொண்டு வந்திடறேன். ’ ‘அதைக் கொண்டு போய் சாக்கடையிலே போடு! ’ ராஜ்கோபாலுக்கு வெறியே வந்து விடுகிறது.

‘தெருவுக்கு வந்தவுடன் ராஜ்கோபால் கைகளை உயர்த்தினான். மூச்சுப் பிதுங்கும் குமட்டல் ஒன்றின் காரணமாக வாந்தி எடுத்தான். கணக்கற்ற முறை காய்ந்து ஆறிப் போன கடலை எண்ணெய் பஜ்ஜியும் தோசையும் பீறிக் கொண்டு வந்து சிந்தின. அதை நக்க ஒரு சொறி நாய் வந்தது.’

மூச்சு முட்டியது எனக்கு. இந்த இடம் வந்ததும் ஒருமுறை தாந்தேயின் டிவைன் காமெடியின் நரகத்தைப் படித்தேன். தாந்தேயும் வர்ஜிலும் கடந்து செல்லும் நரகம். ஆனால் அந்தக் காவிய கவிஞர்களுக்கு சொர்க்கம் என்ற ஒரு இறுதி நம்பிக்கை இருந்தது. ஆனால் நவீனத்துவத்தின் உச்சபட்ச கலைஞனான அசோகமித்திரனின் உலகில் ஆன்மீகத்தின் நம்பிக்கை ஒளி தெரிவதில்லை. மாறாக அங்கே வருவது ஒரு சொறிநாய். வீட்டுக்குப் போய்ச் சேரும் ராஜ்கோபால் அம்மாவைக் கட்டிக் கொண்டு ‘நான் சீரழிஞ்சு போயிட்டேம்மா! ’ என்று கதறுகிறான். அவள் மனத்தில் ‘எங்கோ முட்டிண்டு என்ன பிரயோசனம்?’ என்ற ஒரு சிறு குரலாவது ஒலித்திருக்க வேண்டும். ஆனால் அவள் எதுவும் சொல்லாமல் அவன் முதுகைத் தடவிக் கொடுக்கிறாள்.

அதோடு ராஜ்கோபால் நாவலில் காணாமல் போகிறான். ராம ஐயங்காரின் கதை வந்து விடுகிறது. ராஜ்கோபாலைப் பற்றி யாரோ யாரிடமோ ஒரு சேதியைச் சொல்கிறார்கள், ராஜ்கோபாலும் நடிகை ஜயசந்திரிகாவும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாக.

ராம ஐயங்கார் கோடீஸ்வரர். நாற்பது லட்சத்தில் ஹிந்திப் படம் எடுப்பவர். (கதை நடக்கும் போது சிமெண்ட் விலை கள்ள மார்க்கெட்டில் ஒரு மூட்டை பதிமூன்று ரூபாய்!) ராம ஐயங்கார் எதற்காவது அடிக்கல் நாட்டினால் ஜனாதிபதியிலிருந்து பிரதம மந்திரி வரை வாழ்த்து அனுப்புகிறார்கள். அப்படிப்பட்ட ஐயங்காரின் வாழ்க்கையும் நடராஜன், ராஜ்குமார் போன்றவர்களின் வாழ்க்கையைப் போலவே துயரத்தின் நிழல் படிந்ததாகவே இருக்கிறது. ராம ஐயங்கார் தன் மகன் பாச்சாவிடம் பேசும் நீண்ட பேச்சை உலகின் மகா காவியங்களில் மட்டுமே நீங்கள் காண முடியும்.

எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் கரைந்த நிழல்கள் என்ற இந்தச் சிறிய நாவலைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அசோகமித்திரனிடம் நான் கண்ட இன்னொரு அற்புதம், பெண்களைப் பற்றி இவர் அளவுக்குக் கருணையும் வாத்சல்யமும் அன்பும் பீறிட எழுதிய இன்னொருவரை என்னால் சொல்ல இயலவில்லை. அப்படியே காட்சிப் படிமங்களாகவே என் மனதில் தங்கியிருக்கின்றன அந்தப் பகுதிகள். விழா மாலைப் போதில் என்ற ஒரு குறுநாவல். 1990-ஆம் ஆண்டு அது பிரசுரமான போதே படித்தது. அதற்குப் பிறகு படிக்கவில்லை. ஆனால் அதில் வரும் ஒரு பிரபலமான நடிகை சினிமாத் துறையில் நுழைவதற்கு முன் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் ஒரு அம்மன் சிலைக்கு முன்னே நின்று அழும் காட்சி என்னால் மறக்க முடியாத ஒரு படிமம். அனாதையாக நிற்கும் இந்தியப் பெண்கள் அத்தனை பேரின் உருவகம் அவள். இருவர் என்று ஒரு குறுநாவல். அதில் வரும் வாலா என்றொரு பெண். இந்தியச் சமூகத்தில் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட பெண் இனத்தின் குறியீடு. இளம் வயதிலேயே கணவனை இழந்ததால் தலைமயிர் மழிக்கப்பட்டு நார்மடி கட்டிக் கொண்டிருப்பவள். சகோதரன் வீட்டில் வாழ்கிறாள். ஆனால் அங்கே அவளைக் கொடுமைப்படுத்துபவர்கள் யார் என்றால், அவளுடைய அம்மாவும், மன்னியும். வாலாவின் கணவன் தனம் என்ற ஒரு பெண்ணையும் வைத்துக் கொண்டிருந்தான். கதையில் அவள் ஒரு அற்புதமான காவிய நாயகியாக படைக்கப்பட்டிருக்கிறாள். வாலாவின் மகன் விசு தனத்தைப் பார்க்க அவ்வப்போது செல்வதுண்டு. கொஞ்ச நாள் போகாமல் இருந்து விட்டான். எனவே சிறுவனைப் பார்க்க அவன் வீடு தேடி வண்டி வைத்துக் கொண்டு வருகிறாள் தனம். அப்போது வாலாவின் அம்மா தனத்தை வரவேற்கும் காட்சி இது:

‘பாவி! நீ நன்னாயிருப்பியா? உன் குடும்பம் விளங்குமா? நீ உருப்படுவியா? என் பொண்ணை மொட்டை அடிச்சு மூலையில் உக்கார வைச்சயே? நீ நன்னாயிருப்பியா? தங்கமாயிருந்தவனை சொக்குப் பொடி போட்டு மயக்கிக் காசு பணமெல்லாம் கறந்துண்டதோடு இல்லாமே அவன் உசிரையும் பிடுங்கிண்டியே? உன் குலம் விளங்குமா? நீ நாசமாப் போக! புழுத்துப் போக! கணுக்கணுவா அழுகிப் போக! நாறிப் போக! வாய்க்கரிசிக்கு வழியில்லாம நாதியத்துப் போக! என் வயித்திலே கொள்ளியை வைச்சயே! உன் மூஞ்சியிலே கொள்ளியைப் போட! அவனை அடியோட அழிச்சதுமில்லாம இப்ப என் வீட்டு வாசலை மிதிக்க வறயா! தட்டுவாணிப் பொணமே! தேவடியாப் பொணமே! நீ நாசமாப் போக! நீ கட்டேல போக! விளக்குமாத்தைக் கொண்டாடி, இந்தச் சிறுக்கியைத் தலையிலே அடிச்சுத் துரத்தலாம்! என்னை வயிறெரிய வைச்சயே! என் பொண்ணை வயிறெரிய வைச்சயே! நீ என்ன கதிக்குப் போகப் போறேடீ! தேவடியா முண்டே! இங்கே ஏண்டி வந்தே? அப்பனை மயக்கி முழுங்கியாச்சு, பிள்ளையையும் முழுங்கிடப் பாக்கறயாடீ? நீ உருப்படுவியாடீ? ’

வாலா வந்து தனத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாள். சிறுவனைப் பார்த்து விட்டுத் தெருவிலிருந்தபடியே புறப்பட்டு விடுகிறாள் தனம். விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வரும் வாலாவின் அண்ணன் வாலாவை அடிக்கிறான். அவள் குறுகிக் கொண்டது அடிக்காக அல்ல என்று தோன்றியது. அதையும் கவனியாமல் அவளைத் தோளிலும் முகத்திலும் மாறி மாறி அடிக்கிறான். அண்ணா அண்ணா என்று வாலா முனகுகிறாள். பிறகுதான் அம்மா வந்து அவனிடம் அவள் தூரம் என்று சொல்கிறாள். ‘இதை முன்னியே சொல்லறதுக்கு என்னம்மா? ’ ‘நீ தான் சொல்ல விடலியேடா. ’

தூரமாக இருக்கும் போது தொட்டு அடித்து விட்டதால் அண்ணன் கிணற்றுக்கு அருகே சென்று அமர்கிறான். ‘செத்த வீட்டுக்குப் போய் வந்த மாதிரி வந்ததும் வராததுமா குளிக்க வேண்டியிருக்கு’ என்று சொல்லிக் கொண்டே அவன் மனைவி அவனுக்குக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து விடுகிறாள்.

அடுத்து வாலாவின் அண்ணனுக்கும் அவன் மனைவிக்கும் நடக்கும் உரையாடல் சென்ற நூற்றாண்டில் குடும்பம் என்ற அமைப்பின் படுபயங்கரமான க்ஷீணநிலையைக் காண்பிக்கிறது.

ஒரு ரகசிய பாவனையுடன் அவன் மனைவி ‘வந்தவ இவளுக்காக வரலை. அந்தப் பிள்ளைக்காக வந்திருக்கா.’

‘எது? அந்த பிரம்மஹத்திக்கா?’

‘ஆமாம். வெக்கம் மானம் இல்லாம இவ்வளவு பெரிய பிள்ளையை அத்தனை பேர் முன்னாலேயும் அவளும் கட்டிக்கிறா, இதுவும் தழுவிக் குலாவறது. கொஞ்ச நாழியான்னா அப்படியே படுத்துண்டு புரண்டுப்பா போலவே இருந்தது.’
அண்ணனிடம் வாங்கிய அடியில் ஜன்னி வந்து செத்துப் போகிறாள் வாலா. தனத்தின் கதை அதற்குப் பிறகு தொடர்கிறது. நோபல் பரிசு பெற்ற எத்தனையோ ஐரோப்பிய, அமெரிக்க எழுத்தாளர்களின் அத்தனை கதைகளையும் விட இந்த இருவர் என்ற குறுநாவலின் அடர்த்தியும் காவிய நயமும் மிகவும் பெரியது.

கரைந்த நிழல்கள் நாவலை தி.நகரில் உள்ள நடேசன் பார்க்கில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்துதான் எழுதியதாக அந்த நாவலில் குறிப்பிடுகிறார் அசோகமித்திரன். அந்த பெஞ்ச் எனக்குத் தொழ வேண்டிய இடமாகத் தோன்றுகிறது. சொல்லிக் கொண்டே போகலாம். அசோகமித்திரனின் எழுத்தை ஒன்று விடாமல் தேடிப் படியுங்கள். சர்வதேச அளவிலேயே அசோகமித்திரனைப் போன்ற அற்புதமான கலைஞர்கள் அரிது. இந்த வார்த்தையை நான் அடிக்கோடிட்டுச் சொல்ல விரும்புகிறேன். உலகின் அதியற்புதமான கலைஞன் ஒருவன் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆஸ்திரியாவிலிருந்து எல்ஃப்ரீட் ஜெலினெக் என்ற எழுத்தாளருக்குச் சில ஆண்டுகளுக்கு முன் நோபல் பரிசு கிடைத்தது. ஓரான் பாமுக்குக்கும் அப்படியே. கார்ஸியா மார்க்கேஸ், மரியோ பர்கஸ் யோசா என்று பல பிரபலமான எழுத்தாளர்களும் நோபல் பரிசு பெற்றவர்கள். அவர்கள் எல்லோரையும் விட அப்பரிசுக்குத் தகுதியானவர் அசோகமித்திரன். இப்படிச் சொல்வது கூட அசோகமித்திரனின் தகுதிக்குக் குறைவு தான். அவர் இந்த நூற்றாண்டின் ஷேக்ஸ்பியர்.

***

அசோகமித்திரன் படைப்புகள் பற்றி சாரு நிவேதிதா

 

Advertisements