அசோகமித்திரனின் வறுமை குறித்து எழுதினால் அவரது புதல்வர்களும் குடும்பத்தாரும் வருத்தப்படுகிறார்கள்; அதை மறுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.  இன்று அவருடைய புதல்வர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.  உயர் நடுத்தர வர்க்கத்தினராக மாறியிருக்கிறார்கள்.  ஆனால் நான் எண்பதுகளில் அவரை தி.நகரில் பார்த்த போது மருந்து மாத்திரை வாங்கக் கூட காசு இல்லாமல் இருப்பதாகச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.  ஆனால் அதில் கொஞ்சமும் சுய இரக்கம் இருக்காது.  யாருக்கோ நடந்ததைச் சொல்வது போல் சொல்வார்.  ஆஸ்துமா பிரச்சினையால் ரொம்பவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.  இப்போது அவர் குடும்பத்தார் எங்கள் அப்பாவுக்கு ஆஸ்துமாவே இருந்ததில்லை என்று கூட சொல்லக் கூடும்.  ஆஸ்த்மா நோயாளிகள் பொதுவாக அல்பாயுசில் சாக மாட்டார்கள்.  90 வயது வரை கூட வாழ்வார்கள்.  அந்த ஒரு காரணத்தினாலேயே கிழம்  90 வயது வரை இருக்கும் என்றெல்லாம் என் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன்.  யோவ், கிழம் என்று எழுதி விட்டேன் என்று மறுப்புக் கடிதம் எழுதித் தொலைக்காதே.  கடவுளை அவன் இவன் என்று பேசுவதில்லையா, அதுபோல் சொல்லியிருக்கிறேன்.  அவருக்கு அடிக்கடி மூச்சு விடுவது சிரமமாக இருக்கும்.  அசோகமித்திரன் நிரந்தரமான ஆஸ்துமா நோயாளியா என்று தெரியாது.  ஆனால் கடுமையான மூச்சுப் பிரச்சினை இருநதது.  அதற்கான குழாயை அவர் வைத்திருந்தார்.   1980 என்று ஞாபகம்.  அப்போது அசோகமித்திரனின் புதல்வர்களுக்கு எத்தனை வயது இருக்கும் என்று தெரியவில்லை.  ஆஸ்துமாவுக்கான ஏதோ ஒரு குழல் உடைந்து விட்டது புதிதாக வாங்க வேண்டும், எந்தப் பத்திரிகைகாரன் பணம் அனுப்புவானோ என்று தபால்காரனை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

இலக்கிய உலகிலும் அவருக்கு நல்ல பெயர் இல்லை.  அவர் ஒரு வணிக எழுத்தாளர் என்று சுந்தர ராமசாமி சொல்லி அவருடைய சிஷ்யகோடிகளும் அதை நம்பிக் கொண்டிருந்தனர்.  அசோகமித்திரன் எழுத்தாளரே இல்லை என்று வெங்கட் சாமிநாதன் தன் வாழ்நாள் எல்லாம் போராடினார்.  அசோகமித்திரனைத் திட்டி ஏராளமாக எழுதியிருக்கிறார்.  அந்த ஒரே காரணத்தினால்தான் வெ.சா.வின் அஞ்சலிக் கூட்டத்துக்கு அழகியசிங்கர் என்னை அழைத்த போது வர முடியாது என்று காட்டமாக மறுத்தேன்.  தன் வாழ்நாள் பூராவும் அசோகமித்திரனைக் கீழ்மைப்படுத்திய ஒருவர் வெங்கட் சாமிநாதன்.  சு.ரா. ஏன் அசோகமித்திரனை வணிக எழுத்தாளர் என்று சொன்னார் என்றால், அசோகமித்திரன் வறுமையின் காரணமாக குமுதம், சாவி போன்ற இதழ்களில் எழுதினார்.  ஆனால் அதிலும் கூட ஒரு துளி சமரசம் செய்து கொண்டதில்லை.  இதைப் படிக்கும் நண்பர்கள் நினைத்துப் பாருங்கள்.  மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு, சென்னை நகரில் மாத ஊதியம் வரும் ஒரு வேலையிலும் இல்லாமல் எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தார் அசோகமித்திரன்.  அவர் தமிழில் மட்டுமே எழுதியிருந்தால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டிருந்திருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் திரும்பவும் ஜெமினி ஸ்டுடியோவில் கார் துடைக்கும் வேலைக்குப் போயிருக்க வேண்டும்.  ஜெமினியில் அவர் ப்ரொடக்‌ஷன் மேனேஜர் தான்.  ஆனால் வாசனின் கார் துடைக்க வேண்டும். ஒருநாள் வாசனிடம் நான் ரைட்டர் சார், காரெல்லாம் துடைக்கச் சொல்கிறீர்களெ என்றாராம் அ.மி. அதற்கு வாசன் நீ ரைட்டர் என்றால் இங்கே வேலை செய்ய வந்திருக்க மாட்டாயே என்று சொன்னதும் உடனே அந்தக் கணமே ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு வந்து பட்டினி கிடந்தவர் அசோகமித்திரன்.

அசோகமித்திரன் கிடந்த பட்டினி பற்றி – ஒருநாள் இரண்டு நாள் அல்ல – பல ஆண்டுகள்  கிடந்த பட்டினி பற்றி அவருடைய ஏராளமான பேட்டிகளிலும் கரைந்த நிழல்கள் நாவலிலும் பேசியிருக்கிறார்.

அசோகமித்திரன் குடும்பத்தாருக்கு மட்டும் அசோகமித்திரன் சொந்தம் இல்லை.  அவருடைய உடலை அவசரம் அவசரமாகக் காலை பத்து மணிக்கே சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றது அதர்மத்திலும் அதர்மம்.  அசோகமித்திரன் வெறும் தியாகராஜன் அல்ல.  மூன்று பையன்களுக்குத் தகப்பன் மட்டும் அல்ல.  தமிழின் சொத்து அவர்.  அவர் பெறாத பிள்ளைகளாக நாங்கள் இருக்கிறோம்.  நான் ஒன்பது மணிக்கே போய் விட்டேன்.  ஆனால் பல நண்பர்கள் அவருடைய உடலைக் கூட பார்க்க வாய்ப்புத் தராமல் அவரது குடும்பத்தார் காலை பத்து மணிக்கே தென்னை ஓலையை வண்டியில் ஏற்றி பத்தரைக்குள் எரியூட்டியும் விட்டார்கள்.  கொடுமை.

எனக்கு அச்சமாக இருக்கிறது.  காலையில் ஜெயமோகன் பேசும் போது சொன்னார், சாரு இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து சாரு நிவேதிதா மெர்ஸிடஸ் பென்ஸில்தான் போவார் என்று எழுதுவார்கள் என்று.

***

இது குறித்து ஜெயமோகன் எழுதியிருக்கும் சிறு கட்டுரைக்கு இங்கே இணைப்பு தருகிறேன்.

http://www.jeyamohan.in/96793#.WNjvB_xEnIW

 

Advertisements