இதுவும் ஒரு முக்கியமான மேட்டர்தான். இப்போதே பேசி செட்டில் செய்துவிட வேண்டும். விட்டுவிட்டால் அப்புறம் பின்னால் குத்துதே குடையுதே என்று புலம்பக்கூடாது. சமீப காலங்களாகவே நடிகரும் அந்தத் துறை சார்ந்த சில சங்கங்களில் பொறுப்பில் இருப்பவருமான விஷால் பேசி வருவது குறித்துப் பேசத்தான் இந்தப் பீடிகை. இளைஞர்களின் கையில் அதிகாரம் வருவதை எப்போதுமே ஆதரித்தால் தப்பில்லை என்பது தனிப்பட்ட கருத்து. இளைஞர்கள் கொஞ்சம் பிடிப்பாகச் செயல்படுவார்கள் என்று கருதி அந்தத் துறை சார்ந்த மூத்தவர்கள் ஆதரவு தந்திருக்கிறார்கள் என்கிற வகையில் இந்த வெற்றியை எடுத்துக் கொண்டு அதன் அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும். அதுதான் நல்லதும்கூட.

ஆனால் சமீப காலத்திய அவருடைய செயல்பாடுகள் ஒரு துறை செயல்படும் விதத்தைக் கொஞ்சம்கூட புரிந்து கொள்ளாமல் அனைவரையும் குற்றம் சாட்டும் தொனியில் அமைந்திருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. விஷாலின் நண்பர் ஆர்யா சொல்கிறார். “ஆர்.கே.நகரில் எங்களை விட்டிருந்தால் ஒரு கை பார்த்திருப்போம்”. என்னவிதமான ஸ்டேண்ட்மெண்ட் இது. அது கலவர பூமி. தம்பி கொஞ்சம் ஓரமாய்ப் போய்க் கம்பு சுத்துங்க என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஏற்கனவே தை எழுச்சியின் போதே, நடிகர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் முன்னிறுத்தாமல் மாணவர்கள் செயல்பட்டதிலிருந்து இவர்கள் பாடமே கற்றுக் கொள்ளவில்லையா? டெல்லியில் விவசாயிகளைப் பார்த்தது நல்ல விஷயம்தான். அதைச் செய்யவும் வேண்டும். ஆனால் அடுத்தடுத்து விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேய நினைப்பது அழகல்ல. இந்தமாதிரியான நுனிப்புல் நடவடிக்கைகள் விவசாயிகளின் போராட்டத்தையும் களங்கப்படுத்தி விடும் என்பதும் முக்கியமானது.

இதெல்லாம் பிற துறையில் அவர்கள் செயல்படும் விதத்தைப் பற்றியது. அவர்கள் துறையான சினிமாவையே எடுத்துக் கொள்வோம். படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு பிறகுதான் விமர்சனம் எழுத வேண்டுமாம். சினிமா என்பது எல்லா துறைகளைப் போலவே இதுவும் வியாபாரம். கலைச் சேவை அல்ல. சம்பளம் வாங்காமல் கலைச் சேவை ஆற்றுவார்களா? நான் ஒரு கடை நடத்துகிறேன். கஸ்டமர்கள் எங்களை விமர்சிக்கவே கூடாது என்று சொல்ல முடியுமா? பத்து ரூபாய் கொடுத்து சினிமா பார்த்தால்கூட விமர்சனம் பண்ணுகிற உரிமை இருக்கிறது.

அதை எப்படிக் கட்டிப் போட முடியும்? மைல்டாக விமர்சனம் செய்ய வேண்டுமாம். மைல்டான விமர்சனம் எப்படி இருக்கும் தெரியுமா? “இந்தப் படத்திற்குப் போய்ப் பார்த்தால் நாங்கள் என்ன சொல்ல நினைக்கிறோம் என்பது உங்களுக்குப் புரியும். இப்படிக்கு முனியாண்டி விமர்சன டீம்”. இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும். நம்முடைய பிரச்சினை என்ன என்பது குறித்துத் தெளிவாகப் பேச வேண்டுமே தவிர, ஒரு பொருளைப் பயன்படுத்துபவனிடம் போய் அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கக்கூடாது.

பைரஸி முக்கியமான பிரச்சினைதான். எங்கள் பெயரில் இன்னொருத்தன் கடை போட்டால் அடிவயிறு கலங்குவதைப் போலத்தான் அவர்களுக்கும். ஆனால் பைரஸி துவங்கும் இடம் எது என்பது விஷாலுக்குத் தெரியாதா? தமிழ்நாட்டில் படத்தை ஓட்டி விட்டு வெளிநாட்டு உரிமை தருவோம் என்று சொல்லிப் பாருங்களேன்? அதைவிட்டு விட்டு வேறு வகையிலான சண்டைக்காட்சிகளில் மட்டும் நடிப்பது சரியில்லை என்றுதான் சொல்ல வருகிறேன்.

கடந்த வாரம் தொழில்துறையில் ஒரு முக்கியமான சர்ச்சை ஒன்று எழுந்திருக்கிறது. மிக முக்கியமான சர்ச்சை அது. இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி ஒரு விசயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். கார்ப்பரேட்டுகளில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் சம்பள விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னதோடு இது சமூக சமநிலையைக் குலைக்கும் விதத்தில் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். இத்தனைக்கும் மாதச் சம்பளம் இலட்சங்களில் வாங்குபவர்களைக் குறித்துச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்வோம்.

அதிக சம்பளம் வாங்கும் துறை சினிமாதானே? சினிமாவிற்கு நிகராக உயிரைக் கொடுத்து வேலைபார்ப்பவர்களையும் சினிமாவில் சம்பளம் வாங்குபவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த சமூக சமநிலை குலைவு என்பது புரியும். ஆக இது ஒரு அதிகப்பட்ச ஊதியம் வழங்கும், பெறும் வியாபாரம். இங்கே கலைச் சேவை என்று சொல்லிக் கும்மியடிக்கக்கூடாது. முடிந்தால் தயாரிப்புச் செலவைக் குறையுங்கள். சம்பளத்தைக் குறையுங்கள். தியேட்டரில் டிக்கெட் விலையைக் குறையுங்கள். இதையெல்லாம் செய்வதற்குத் துளிகூட முயற்சி செய்யாமல், அவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் சினிமா துறையை அழிக்க வந்தவர்கள் போல பேசுவது முறையாகாது. தொடர்ந்து தமிழ்நாட்டில் உச்சம் பெற்றவர்கள் வசிக்கும் துறை அது என்பதை மறந்துவிடக்கூடாது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் உடனடியாகச் செய்ய வேண்டியது இதுதான். நடிகர்களை அழைத்து சமூகச் சமநிலை தவறிவிடக்கூடாது என்று சொல்லி முறையான சம்பளத்தை நிர்ணயம் செய்யத் தயாராகுங்கள். எதற்காக இரண்டே கால் மணி நேரம் ஒரு படம் ஓட வேண்டும்? தேவையில்லாத பாட்டுக் கூத்தெல்லாம் நாங்கள் கேட்டோமா? நாங்கள் கேட்காததற்கும் சேர்த்து விலை வைத்தால் எப்படி? அதைக் கேட்கிற உரிமை எங்களுக்கு இருக்கிறதில்லையா? சினிமா ஓடும் நேரத்தைக் குறையுங்கள். தன்னாலேயே பட்ஜெட்டும் குறைந்துவிடும். இதையெல்லாம் செய்து விட்டு, ஆர்.கே.நகரை ஒரு கை பார்க்க வாருங்கள். தொப்பி சின்னத்தில் நின்றால்கூட ஓட்டைக் குத்தத் தயாராகவே இருக்கிறேன்.

சரவணன் சந்திரன் முகநூலில்.

Advertisements